பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு!: கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 2,500 கனஅடி வெளியேற்றம்..கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீர் வினாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர், பூண்டி நீர்த்தேக்கத்தில் தேக்கி வைத்து அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி சென்னை குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 2,040 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 35 அடி உயரம் கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது 34.25 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 1944ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்னரே உபரிநீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு!: கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 2,500 கனஅடி வெளியேற்றம்..கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: