சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான வளாக நேர்க்காணல் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் பிஇ படிக்கும் மாணவர்கள் 85% பேர், எம்இ படிக்கும் 50% மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் கூறினர். தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் இறுதியாண்டில் வளாக நேர்காணல் தொடங்கும். அவர்கள் தங்களுடைய படிப்பை நிறைவு செய்யும் போது பணிக்கான உத்தரவாத கடிதத்தை நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறார்கள்.
இதில் பலருக்கு பெரிய நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்திலும், சிலருக்கு நடுத்தர நிறுவனங்களில் பணிகள் கிடைக்கும். இந்நிலையில் நடப்பாண்டில் அண்ணா பல்கலைக்கழகம், தனியார், அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் வளாக நேர்காணல் இதுவரை தொடங்கவில்லை. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர முக்கிய நிறுவனங்கள் அவர்களுக்கான பணியாட்களை தேர்வு செய்வதில் தாமதம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும், பணியாட்களை தேர்வு செய்யும் (பல்க் புக்கிங்) தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய நிறுவனங்களை தவிர, மற்ற துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் வளாக நேர்காணலில் பங்கேற்று, அவர்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்யத் தொடங்கி இருக்கின்றன.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்.ஐ.டி.), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய 4 கல்லூரிகளில் வளாக நேர்காணல் கடந்த மாதம் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதுவரை 70 நிறுவனங்கள், வளாக நேர்காணலில் பங்கேற்க பதிவு செய்திருப்பதாகவும், அதில் 43 நிறுவனங்களின் நேர்காணலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, அவர்களில் 289 இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் பணி இடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஆப்பியன் என்ற நிறுவனம் ஆண்டுக்கு ₹29 லட்சம் சம்பளத்தில் ஒரு மாணவருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. செல் நிறுவனம் 12 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. டெகத்லான் நிறுவனம் வருடம் 5.7 லட்சம் சம்பளத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது என தெரிவித்தனர்.
முன்னணி நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களும் 3 ஆண்டுகளுக்கு பிறகு வளாக நேர்காணலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன. அதிகளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் வளாக நேர்காணலில் அடுத்த ஆண்டு(2024) பிப்ரவரி மாதத்தில் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்வார்கள்.அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, சில இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் வளாக நேர்காணல் தொடங்கி உள்ளது. வளாக நேர்காணல் தாமதமாக தொடங்கினாலும், கடந்த ஆண்டைவிட அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல் தமிழ் வழியில் இன்ஜினியரிங் படித்துள்ள மாணவர்களும் வாய்ப்பை பெறுகின்றனர். இந்த வருடம் பிஇயில் 85% மாணவர்களும், எம்இயில் 50% மாணவர்களும் வேலை வாய்ப்பை பெற்று விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், கல்லூரிகளின் அழுத்தம் காரணமாக வளாக நேர்க்காணல் மூலம் பலரை தேர்வு செய்யும் பல நிறுவனங்கள், பணி நியமன ஆணை வழங்கிய பின்னர் பல தேர்வுகளை வைத்து சிலரை வெளியேற்றி விடுகின்றனர். இதற்கான உரிய காரணங்களை அந்தந்த நிறுவனங்களிடம் தான் கேட்க வேண்டும். எனவே இந்த வேலையை 100% நிரந்தரம் என நினைத்து பின்னர் மாணவர்கள் மனம் தளர கூடாது. வேலை கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்வழி மாணவர்கள் 2022-23ம் கல்வியாண்டு
மெக்கானிக்கல் பிரிவில் 24 மாணவர்கள் படித்துவந்த நிலையில் அவர்களில் 20 பேரும், சிவில் பிரிவில் 23 மாணவர்கள் படித்துவந்த நிலையில் அவர்களில் 5 பேர் வேலைவாய்ப்பை பெற்றுனர்.
The post வளாக நேர்காணலில் பி.இ. படிக்கும் 85% பேருக்கு வேலை: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.