கேளம்பாக்கத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, தொடங்கி வைத்தார். திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில் கோவளம் செல்லும் சாலையில் மழைக்காலங்களில் வெள்ளநீர் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அந்த இடத்தை பார்வையிட்டு புதிய மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர், ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திவ்யா வினோத்கண்ணன், நந்தினி நரேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அன்புச்செழியன், திருப்போரூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன், திமுக கிளை செயலாளர் பாளையம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கேளம்பாக்கத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: