விடுமுறை நாளையொட்டி சுற்றுலா பயணிகளால் களை கட்டிய கல்லணை

திருக்காட்டுப்பள்ளி, செப். 25: விடுமுறை நாளான நேற்று, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை காவிரியாற்றில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. திருக்காட்டுப்பள்ளி அருகே கரிகாலன் கட்டிய கல்லணை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. கல்லணையை சுற்றி பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விடுமுறை தினமான நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம், காவிரி ஆற்றின் பாலத்தில் உள்ள அனைத்து சிலைகள், கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா, காவிரி தாய் சிலை, கரிகாலன் மணிமண்டபம் ஆகிய பகுதிகளை உற்சாகமுடன் சுற்றி பார்த்தனர். கல்லணை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடாமல் இருப்பதால் அனைத்து இடங்களிலும் சிறுவர், சிறுமிகள் வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பயமின்றி குளித்து மகிழ்ந்தனர். காவிரியில் காணும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தற்போது வெண்ணாற்றில் மட்டும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் அனைத்து விளையாட்டு சாதனங்களிலும் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீர்வளத்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியபடி இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தோகூர் போலீசார் செய்திருந்தனர்.

The post விடுமுறை நாளையொட்டி சுற்றுலா பயணிகளால் களை கட்டிய கல்லணை appeared first on Dinakaran.

Related Stories: