கேங்மேன் பணிக்காக போராட்டம் நடத்தியவர்களுக்கு அரசு பணி நியமன ஆணை வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: `கேங்மேன்’ பணி வழங்கக் கோரி போராடிய தமிழக இளைஞர்கள் மேல் பதிந்த வழக்குகளை திரும்பப் பெறவும், அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிடவும் தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 நபர்கள், தங்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டி அமைதியான முறையில் பல போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வந்தனர். அவர்களது தொடர் போராட்டத்தையடுத்து, தமிழ் நாடு மின்சார வாரியத் தலைவர், அவர்களுடைய கோரிக்கையை பரிசீலிப்பதற்காக ஒரு கமிட்டி அமைத்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

கமிட்டி அமைக்கப்பட்டு அதன் முடிவு மின்சார வாரியத்தின் முழு பெஞ்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும், தங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் வீண் காலதாமதம் செய்வதாக, போராடியவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் தெரிய வருகின்றன. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதலமைச்சரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும்.

தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல் துறையை வலியுறுத்துகிறேன். மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க, முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கேங்மேன் பணிக்காக போராட்டம் நடத்தியவர்களுக்கு அரசு பணி நியமன ஆணை வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: