ஆசிய விளையாட்டு போட்டி: பார்வையாளர்களை பிரமிக்க வைத்த வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில் இடம் பெற்ற வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின. ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் மைய அரங்கில் நடந்த தொடக்க விழாவில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய விளையாட்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக கம்போடிய மன்னர் நரோடோம் சிஹாமணி, சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால், நேபாள பிரதமர் புஷ்ப கமல், தென் கொரியா பிரதமர் ஹான் டக் சோ, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் செயல் தலைவர் ரந்தீர் சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.

சீனாவின் கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு, முப்பரிமாணம், மெய்நிகர் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின. அக்.8 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த 12,000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் 40 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து: ஆசிய விளையாட்டு போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ X வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ஆசிய விளையாட்டு தொடங்கி நடைபெறும் நிலையில், இந்திய குழுவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது வரை இல்லாத அளவுக்கு இந்தியா சார்பில் மிகப் பெரிய குழுவை அனுப்பி வைத்துள்ளதன் மூலமாக, விளையாட்டு மீதான நமது ஆர்வமும், ஈடுபாடும் வெளிப்படுகிறது. நமது வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு உண்மையான விளையாட்டு நெறியை வெளிப்படுத்த வேண்டும்’ என்று தகவல் பதிந்துள்ளார்.

* ஆசிய விளையாட்டு போட்டியின் செஸ் பிரிவில் தனிநபர் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. ரேப்பிட் முறையில் நடக்க உள்ள போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்தியா சார்பில் விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, மகளிர் பிரிவில் கோனெரு ஹம்பி, டி.ஹரிகா பங்கேற்கின்றனர். நம்பிக்கை நட்சத்திரங்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் இருவரும் குழு போட்டியில் களமிறங்க உள்ளனர்.

* ஆசிய தொடருக்கான இந்திய ஸ்குவாஷ் அணியில் டெல்லியை சேர்ந்த 15 வயது சிறுமி அனஹத் சிங் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய குழுவின் மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமை அனஹத்துக்கு கிடைத்துள்ளது.

* வங்கதேச அணியுடன் மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 86 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டாஸ் வென்று பேட் செய்த நியூசி. 49.2 ஓவரில் 254 ரன் குவித்து ஆல் அவுட்டானது (நிகோல்ஸ் 49, பிளண்டெல் 68, சோதி 35). அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 41.1 ஓவரில் 168 ரன்னுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது (தமிம் 44, மகமதுல்லா 49, நசும் அகமது 21). நியூசி. தரப்பில் சோதி 6 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

The post ஆசிய விளையாட்டு போட்டி: பார்வையாளர்களை பிரமிக்க வைத்த வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் appeared first on Dinakaran.

Related Stories: