ரூ.1.2 கோடி அரசு நிலத்திற்கு பட்டா துணை தாசில்தார், விஏஓ சஸ்பெண்ட்: தூத்துக்குடி கலெக்டர் அதிரடி

தூத்துக்குடி: ரூ.1.2 கோடி சந்தை மதிப்பிலான 40 சென்ட் அரசு நிலத்திற்கு மோசடியாக பட்டா வழங்கிய துணை தாசில்தார், விஏஓவை சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா, எப்போதும்வென்றான் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக வட்டக் கணக்கு மற்றும் நத்த நிலவரி திட்ட தூய சிட்டா பதிவேட்டில் முறைகேடாக பதிவு செய்துள்ளனர்.

சுமார் ரூ.1.2 கோடி சந்தை மதிப்பிலான 40 சென்ட் நிலத்தினை விதிமுறைக்கு புறம்பாக நத்தம் பட்டா வழங்கியும், கிராம நிர்வாக அலுவகத்தில் வைக்கப்பட வேண்டிய பதிவேட்டை தனது வீட்டில் வைத்து முறைகேட்டில் ஈடுபட்டும், முறைகேடான பட்டாவிற்கு தூய நகல் பட்டா வழங்கியும் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேல்குமார், எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் கண்ணன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேல்குமார் மற்றும் எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் கண்ணன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.

The post ரூ.1.2 கோடி அரசு நிலத்திற்கு பட்டா துணை தாசில்தார், விஏஓ சஸ்பெண்ட்: தூத்துக்குடி கலெக்டர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: