இந்த ரெயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 5 நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் சேவை நடைபெறுகிறது. சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பு தென்மாவட்ட மக்கள் மத்தியில் இருந்து வந்தது. சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலில் சாதாரணசேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.1620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு ரூ.3025. இந்த பெட்டியில் இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கும். 360 டிகிரியில் இருக்கையை திருப்பி கொள்ளும் வசதி உள்ளது.
ஒரே ஒரு பெட்டியில் மட்டுமே இந்த சொகுசு வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இவற்றின் கட்டணம் அதிகமாகும். எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு 2 வேளை உணவு வழங்கப்படும். மதியம் மற்றும் இரவு உணவுடன் டீ, காபி, சூப், பிஸ்கட் போன்றவை வழங்கப்படும். அதேபோல நெல்லையிலிருந்து புறப்பட்டு எழும்பூருக்கு வரும்போது காபி அல்லது டீ, டிபன், மதியம் சாப்பாடு போன்றவை வழங்கப்படும். இந்த ரயிலில் பேண்ட்ரி கார் வசதி இல்லை என்றாலும் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே பயணிகளுக்கு சைவ, அசைவ உணவு பற்றி கேட்டு பதிவு செய்யப்படும். உணவிற்கும் சேர்த்து தான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக ரூ.300, எக்சிகியூட்டிவ் சேர்கார் பயணிகளுக்கு ரூ.375, உணவிற்காக வசூலிக்கப்படுகிறது. புதிய வந்தே பாரத் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாலும் திங்கட்கிழமை முதல் கால அட்டவணைப்படி இயங்கும் என்றும் இதற்கான முன்பதிவு 24ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படும் வந்தே பாரத் ரயிலை முக்கிய ரயில் நிலையங்களில் வரவேற்க ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.
விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது. 2 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்படும். அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன், பொதுமக்களும் புதிய ரயிலை வரவேற்க நிலையங்களில் ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல விஜயவாடாவில் இருந்து வரும் வந்தே பாரத் ரயிலை அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், சென்ட்ரல் நிலையத்தில் வரவேற்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 530 பயணிகள் பயணம் செய்ய முடியும்.
* எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம்
அடிப்படை கட்டணம் ரூ.2391, முன் பதிவு கட்டணம் ரூ.60, சூப்பர் ஃபாஸ்ட் ரூ. 75, உணவு ரூ. 370, ஜி.எஸ்.டி ரூ.126 மொத்தம்: 3025.
* சாதாரண சேர்கார் கட்டணம்
அடிப்படை கட்டணம் ரூ.1172, முன் பதிவு கட்டணம் ரூ.40, சூப்பர் ஃபாஸ்ட் ரூ. 45, உணவு ரூ. 300, ஜி.எஸ்.டி ரூ.63 மொத்தம்:1620.
The post சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணம் ரூ.1620 appeared first on Dinakaran.
