காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஆதரவளிக்கும்: அதிபர் எர்டோகன்

ஐநா: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த துருக்கி ஆதரவளிக்கும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைமை பொறுப்பில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த 9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துருக்கி அதிபர் ரெசப் தயீப் எர்டோகன், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சிவில் விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 78வது அமர்வு கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் உலக தலைவர்களிடையே உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன், “தெற்காசியாவில் பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, செழுமைக்கு வழி வகுக்கும் மற்றொரு வளர்ச்சி காஷ்மீரில் நீடித்த, நியாயமான அமைதியை ஏற்படுத்துவதாகும்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த துருக்கி ஆதரவளிக்கும்” என்று தெரிவித்தார்.

The post காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஆதரவளிக்கும்: அதிபர் எர்டோகன் appeared first on Dinakaran.

Related Stories: