நியூயார்க்: தனது மகனை நாய் கடித்ததால், ஆசை ஆசையாக வளர்த்த செல்லப்பிராணியை நடிகை ஜெனிபர் லாரன்ஸ் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற ‘டை மை லவ்’ என்ற தனது புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், தனது செல்லப்பிராணி குறித்து உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் ‘பிப்பி’ என்ற சிஹுவாஹுவா வகை நாயை அவர் மிகவும் அன்பாக வளர்த்து வந்தார். இந்நிலையில், அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, நாய் வளர்ப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, அந்த நாய் அவரது மகனைக் கடித்த சம்பவம் அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் குழந்தைகளுடன் நாய் இருப்பதை அவர் பாதுகாப்பாக உணரவில்லை. இது குறித்து அவர் பேசுகையில், ‘எனது மகனை நாய் கடித்த பிறகு நாய்கள் மீதான எனது பார்வையே மாறிவிட்டது; அவை குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றின’ என்று வேதனையுடன் குறிப்பிட்டார். மேலும், நியூயார்க் நகரச் சூழல் அந்த நாய்க்குப் பிடிக்காததால், தற்போது அதனைத் தனது பெற்றோரின் வீட்டில் விட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாய் உயிருடன் நலமாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். நாயை வெளியேற்றிய பிறகு, தற்போது ‘ஃபிரெட்’ என்ற பூனையை வளர்த்து வருவதாகவும், பூனைகள் மிகவும் வேடிக்கையானவை என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
