லண்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதால், எக்ஸ் சமூக வலைதளத்தை முடக்கப் போவதாகப் பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பெரும்பணக்காரரான எலான் மஸ்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் ‘குரோக்’ என்ற செயற்கை நுண்ணறிவு வசதி செயல்பட்டு வருகிறது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றியமைக்கப்பட்டுப் பரப்பப்படுவதாகக் கடந்த சில நாட்களாகப் புகார்கள் எழுந்தன.
குறிப்பாகப் இங்கிலாந்து இளவரசி வேல்ஸ் உட்படப் பலரது புகைப்படங்கள் மிகவும் மோசமான வகையில் போலியாக உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலானது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எக்ஸ் தளம் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, இங்கிலாந்து நாடாளுமன்றக் பெண்கள் மற்றும் சமத்துவக் குழு இத்தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக 7ம் தேதியே அறிவித்துவிட்டது. தற்போது இப்பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், இங்கிலாந்தின் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எக்ஸ் நிறுவனத்தின் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘சட்டவிரோதமான படங்கள் உருவாக்கப்படுவதை ஏற்க முடியாது; எக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்படும்’ என்று கூறியுள்ளார். விதிமீறல் தொடர்ந்தால் எக்ஸ் நிறுவனத்திற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கவோ அல்லது இங்கிலாந்தில் அத்தளத்தை முழுமையாகத் தடை செய்யவோ வாய்ப்புள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள எலான் மஸ்க், ‘சட்டவிரோதப் பதிவுகளை உருவாக்குபவர்கள் மற்றும் பதிவேற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.
