நியூயார்க்: நியூயார்க்கின் முதல் மேயருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை வெளியிட்ட கவர்ச்சி வீடியோ மற்றும் மசூதி புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி என்பவர் கடந்த 1ம் தேதி பதவியேற்றார். இவர் நியூயார்க் நகரின் முதல் இஸ்லாமிய மேயர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். ஜனநாயக சோசலிசவாதியான இவரது பதவியேற்பு விழா உலக அளவில் கவனம் ஈர்த்தது. இவரது வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல மாடல் அழகியும் நடிகையுமான எமிலி ரதாஜ்கோவ்ஸ்கி, மேயருக்கு வாழ்த்து தெரிவித்து ‘மம்தானியின் நியூயார்க்’ என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது விபரீதத்தில் முடிந்துள்ளது.
அந்தப் பதிவில், அவர் மிகவும் ஆபாசமான ஆடையணிந்து கடையொன்றில் கவர்ச்சியாக நடனமாடும் வீடியோவை முதலில் இணைத்திருந்தார். ஆனால், அதற்கடுத்த பதிவிலேயே அவர் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மசூதிக்குச் சென்றபோது பர்தா அணிந்து எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். கவர்ச்சியான நடன வீடியோவையும், மசூதி புகைப்படத்தையும் ஒரே பதிவில் இணைத்து வெளியிட்டது இஸ்லாமியர்களை அவமதிக்கும் செயல் என்று இணையவாசிகள் கொந்தளித்துள்ளனர். இது குறித்துப் பலர், ‘இது மிகவும் அவமரியாதையான செயல்; மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது’ என்று எமிலியை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
