கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆஜரான ஜெ. டிரைவரின் அண்ணனிடம் சிபிசிஐடி 8 மணி நேரம் வாக்குமூலம்: கனகராஜை 2 முறை கொல்ல முயன்றதாக பேட்டி

* அதிமுக முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் என 50 பேர் பட்டியலை வழங்கினார்

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், சிபிசிஐடி அதிகாரிகள் முன் ஆஜராகி 8 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 50க்கு மேற்பட்டவர்களின் பட்டியலை அளித்து அவர்களிடம் விசாரிக்கும்படி கூறியதாக தெரிவித்துள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார்.

இதில் செல்போன் ஆதாரங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில், தனபால் தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்து சம்மன் அனுப்பினர். இதற்காக கோவை சிபிசிஐடி போலீசார் முன்பு தனபால் நேற்று காலை ஆஜராக வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொடநாடு வழக்கில் யார்? யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது, என்ன நடந்தது என என்னிடம் சொல்லியுள்ளார். இந்த வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர். ஒரு சில கூலிப்படையினரும் உள்ளனர். கொடநாடு சம்பவத்திற்கு பிறகு சங்ககிரியில் ஆவணங்களை கொடுக்கும் போது இருந்தவர்களின் பட்டியல் இது. கனகராஜிடம் பேரம் பேசிய பணத்தை அளிக்காமல் அவரை தாக்கியுள்ளனர்‌. எஸ்பிசிஐடி ஒருவரும் சேர்ந்து தாக்கியுள்ளார். 2 நாட்கள் கழித்து எங்களது சமுத்திரம் கிராமத்தில் மது குடிக்கும் போது, அதில் விஷம் கலந்தது தெரிந்து கனகராஜ் தப்பினார்.

மீண்டும் ஆத்தூரில் அதிமுக மாவட்ட செயலாளர் பணம் தருவதாக அழைத்து, அயோத்தியாபட்டினம் என்ற இடத்தில் கொலை செய்ய முயன்றும் தப்பி விட்டார். கடைசியாக, ஆத்தூரில் திட்டமிட்டு கொலை செய்து விட்டு விபத்தில் பலியானது போல சாலையில் வீசி சென்றுள்ளனர். இதை நான் அப்போது இருந்தே சொல்லி வருகிறேன். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. சிபிசிஐடி மூலம் தற்போது நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. கனகராஜ் கொண்டு வந்த சூட்கேசில் ஆவணங்கள் இருந்தன. 5 பேக்குகளில் 3 சங்ககிரியில் வைத்தும், 2 பேக் சேலத்தில் அதிமுக மாவட்ட செயலாளரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாஜி முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், ஐஜி, ஏடிஎஸ்பி, எஸ்.பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்பிசிஐடி ஆகியோரையும் விசாரிக்க வேண்டும். அவர்களை விசாரித்தால் எல்லாம் வெளியே வரும். 2017க்கு பிறகு கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சொத்து மதிப்பு உயர்வு குறித்து லஞ்ச ஒழிப்பு துறை கவனிக்க வேண்டும். விசாரணை அதிகாரியின் சொத்து மதிப்பையும் கவனிக்க வேண்டும். நான் தடயங்களை அழிக்கவில்லை. என் மீது குற்றச்சாட்டை மாற்றியுள்ளனர். சிபிசிஐடி விசாரணையில் அனைத்தையும் சொல்வேன்.

விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைக்க தயார். தற்சமயம் எனக்கு மிரட்டல் இல்லை. எனக்கு அதிமுக தரப்பில் 2 ஆயிரம் கோடி தருவதாக பேரம் பேசினார்கள். உண்மை கண்டறியும் சோதனைக்கும் நான் தயார். என்னை வெட்டி கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன். எதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்துக்கு சென்றார். அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் தனபால் அளித்த பேட்டி: சிபிசிஐடி எஸ்பி மற்றும் 4 டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்றது. வரும் 26ம் தேதி மீண்டும் ஆஜராக கூறியுள்ளனர். விசாரணைக்கு பின் மனதில் இருந்த பாரம் பாதி குறைந்துள்ளது. சிபிசிஐடி விசாரணை எனக்கு நிறைவாக இருந்தது. விசாரணையில், வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், திருப்பூர்,கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர் பட்டியலை அளித்துள்ளேன்.

இதில், ஏற்கனவே கூறியவர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ, யூனியன் சேர்மன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அவர்களுடைய பினாமி பெயர்களும் உள்ளது. சூட்கேட்ஸ் கொடுத்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த விசாரணையில் நான் இன்னும் சொல்ல வேண்டியுள்ளது. விசாரணை செய்த அதிகாரிகள் நேர்மையாக இருந்தனர். ஆதாரங்கள் இல்லை என்பதால் சந்தேகப்படும் நபர்களின் பெயர் பட்டியல் மட்டும் தான் இருந்தது. அதையும் வழங்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆஜரான ஜெ. டிரைவரின் அண்ணனிடம் சிபிசிஐடி 8 மணி நேரம் வாக்குமூலம்: கனகராஜை 2 முறை கொல்ல முயன்றதாக பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: