கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட துவக்க விழா: விழாக்கோலம் பூண்டது காஞ்சி மாநகர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதனால், காஞ்சிபுரம் மாநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 10 ஆயிரம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்ட நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி தொடங்கி வைக்கிறார். இதில் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்குகிறார். இதில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வரவேற்புரை ஆற்றுகிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான சுந்தர், திமுக மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான எழிலரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

முன்னதாக, உளுந்தை கிராமத்திலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடையில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ராஜகுளம், பொன்னேரிகரை ஆகிய 4 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இதனை தொடர்ந்து, அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்று பார்வையிடுவதுடன் அங்குள்ள அவரது உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதன் பின்னர், விழா மேடைக்கு வந்து மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.

நகர் முழுவதும் முதல்வரை வரவேற்கும் பேனர்கள் மற்றும் விழா பந்தல் அருகே வாழை தோரணம் மற்றும் பிரம்மாண்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வரும் மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கார்களை நிறுத்த வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவி குழுக்களின் கண்காட்சியும் விழா அரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. மணல் சிற்பம்: விழாவையொட்டி கூட்ட மேடையருகே முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவ மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு 2 பைகள்: விழாவில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு 2 பைகளில் குடிநீர், சிற்றுண்டி நொறுக்கு தீனிகளுடன் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் நல திட்டங்கள் குறித்த கையேடு ஒன்றும் வழங்கப்படுகிறது.

*பாதுகாப்பு ஏற்பாடுகள்
வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜி பொன்னி, போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வரும் பாதை மற்றும் மாநகர் முழுவதும் டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது விழா நடைபெறும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் மாலை வரை காஞ்சிபுரம் மாநகர் பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மாற்று வழியாக களியனூர், வழியாகயும், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஒலிமுகமது பேட்டை வழியாக வந்தவாசி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட துவக்க விழா: விழாக்கோலம் பூண்டது காஞ்சி மாநகர் appeared first on Dinakaran.

Related Stories: