ஓசிஎப் குடியிருப்பில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி; தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் விசாரணை: உயிரிழப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை

ஆவடி: ஆவடி, கிரி நகரில் உள்ள ஒன்றிய அரசு நிறுவன ஊழியர்கள் வசிக்கும் ஓ.சி.எப்., குடியிருப்பு வளாகத்தில் கடந்த 7ம் தேதி, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் ஈடுபட்டனர். இதில், பட்டாபிராம், பீமாராவ் நகரைச் சேர்ந்த மோசஸ் (45) மற்றும் ஆவடியைச் சேர்ந்த தேவன் (50) இருவரும் விஷவாயு தாக்கி இறந்தனர். இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ..2 லட்சம், இரு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நேற்று விசாரணை செய்தார். அதன்பின், ஓ.சி.எப்., விருந்தினர் மாளிகையில் உயிரிழந்த தொழிலாளர்களின் இரு குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஓ.சி.எப்., பொது மேலாளர் சீனிவாச ரெட்டி, ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ், காவல் துணை ஆணையர் பாஸ்கர், காவல் உதவி ஆணையர் அன்பழகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, தாட்கோ மாவட்ட மேலாளர் இந்திராணி மற்றும் ஆவடி வட்டாட்சியர் எஸ்.விஜயகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: விஷவாயு தாக்கி பலியான தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்குவது தொடர்பாக, ஓ.சி.எப்., பொது மேலாளர் சீனிவாச ரெட்டியிடம் கோரிக்கை வைத்தோம். இந்த நிவாரண தொகையை 22ம் தேதி வழங்குவதாக அவர் தெரிவித்தார். அதேபோல், மாவட்ட தூய்மைப்பணியாளர் வாரியம் சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட மோசஸ் எஸ்.சி.-எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர் என்பதால், எஸ்.சி.-எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் வழங்கப்படும். மோசஸ் குடும்பத்திற்கு மட்டும் மொத்தம் ரூ.32 லட்சம் வழங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேவனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

பெரும்பாலும், தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள்தான் இதுபோன்ற துயர சம்பவங்களில் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், விஷவாயு தாக்கி இறப்பவர்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அதை தடுப்பதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, இது தொடராமல் இருக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓசிஎப் குடியிருப்பில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி; தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் விசாரணை: உயிரிழப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: