குறிப்பாக திருச்சி மற்றும் வேலூரில் இயங்கி வரும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக பிரபல தொழிலதிபர்களான புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகியோர் உள்ளனர். மணல் ஒப்பந்த குவாரிகளில் வரும் வருமானத்தை சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்வதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை அதிகாரி முத்தையா ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் கிராமத்தில் உள்ள தொழிலதிபரான எஸ்.ராமச்சந்திரன் வீட்டிற்கு நேற்று காலை புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பதிவு கொண்ட 3 வாகனங்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படைவீரர்களுடன் அதிரடி சோதனை நடத்தினர். புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ராமச்சந்திரனுக்கு சொந்தமான அலுவலகம், ராமச்சந்திரனின் நண்பரான கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புனல்குளம் கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சண்முகம் (அதிமுக முன்னாள் எம்பி திருச்சி பா.குமாரின் உறவினர்) என்பவருக்கு சொந்தமான கிராவல் குவாரி, புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள முருகபாலா என்பவரது ஆர்கிடெக் அலுவலகம் என 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்: எஸ்.ஆர்.என்று அழைக்கப்படும் தொழிலதிபர் ராமச்சந்திரனின் நண்பர் திண்டுக்கல் ரத்தினம். திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்வி நிறுவனம் மற்றும் மணல் குவாரி நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். திண்டுக்கல் ரத்தினத்திற்கு சொந்தமான, திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் ரத்தினத்தின் மைத்துனரான என்.ஜி.ஓ. காலனி ஹனிபா நகரில் வசித்து வரும் கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், மணல் குவாரி மற்றும் ரியல் எஸ்டேட் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
மேலும், திருச்சி திருவானைக்காவல் அருகே கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள மணல் குவாரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் வந்து சோதனை நடத்தினர். திருச்சி நீர்வள ஆதாரத்துறையின் கனிமவள கண்காணிப்பு கோட்ட உதவி பொறியாளர் சாதிக்பாட்ஷா , இளநிலை பொறியாளர் ஆறுமுகம் ஆகியோரை அழைத்து வந்து நேரில் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த பதிலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ஒருவந்தூர் பகுதியில், காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. மணல் அள்ளும் உரிமையை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராமய்யா என்பவர் பெயரிலும், இங்கு டன் கணக்கில் மணல் அள்ளிக் கொண்டு வந்து, செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, மணல் சேமிப்பு கிடங்கு ஆர்.எஸ்.கன்ஸ்ட்ரக்சன்ஸ் மற்றும் சேமிப்பு கிடங்கில் உள்ள மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் உரிமம் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் நடத்தி வருகிறார்.
இதனால் மணல் கிடங்கு மற்றும் மணல் குவாரிகளில் காவிரி ஆற்றிலிருந்து தினசரி எவ்வளவு மணல் எடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு மணல் எடுத்துள்ளனர். அதில், எவ்வளவு மணல் விற்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவு மூலம் எவ்வளவு விற்பனை நடைபெற்றுள்ளது, அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் குறித்தும் குவாரி மற்றும் மணல் குடோனில் பணியாற்றி வரும் ஊழியர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை: சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்து வரும் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குவாரி முதலாளிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி ஆவணங்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. குவாரி அதிபரான ராமச்சந்திரனுக்கு சொந்தமான சென்னை தேனாம்பேட்டை வடக்கு கிரசண்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ஆலந்தூர் நோபுள் தெருவில் உள்ள காசா கிராண்ட் அரிஸ்டோ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரி முத்தையா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் குவாரி உரிமையாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள், சொத்துப்பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் மணல் குவாரி தொழிலதிபர்களான ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், அவரது மைத்துனரான தொழிலதிபர் கோவிந்தன், பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம், முத்தையா ஆகியோர் வீடு, அலுவலகம் என தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், பல கோடி ரூபாய் பணம், தங்கம் நகைகள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள், பினாமிகள் பெயரில் வாங்கி குவிக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. சோதனை முடிவுக்கு பிறகு தான் எத்தனை கோடி சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என முழுமையாக தெரியவரும் என்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் மணல் குவாரி அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் உள்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், வேலூரில் நடந்தது appeared first on Dinakaran.
