சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்ஐவி விழிப்புணர்வு மாரத்தான்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, எச்.ஐ.வி. விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை மேயர் பிரியா நேற்று தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், மாரத்தானில் ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்த ரெட் ரன் மாரத்தானில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றிய அடிப்படை அறிவு அதிகப்படுத்துதல், போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்த்தல், இளைஞர்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பாலியல் நடத்தையை ஊக்குவித்தல், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று தொடர்பான சேவைகளை ஊக்குவித்தல், காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குதல், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவித்தல் ஆகும். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், பொது சுகாதாரக் குழு தலைவர் சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க இணை இயக்குநர் செந்தில், சென்னை மாவட்ட திட்ட மேலாளர் (எய்ட்ஸ்) கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்ஐவி விழிப்புணர்வு மாரத்தான்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: