சதுர்த்தி விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் விநாயகர் சிலை விற்பனை தீவிரம்

1 அடி முதல் 12 அடி வரை விதவிதமாக வடிவமைப்பு
ரூ.1000 முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை நிர்ணயம்

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டையில் விநாயகர் சிலை விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. 1 அடி முதல் 12 அடி வரை விதவிதமாக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.1000 முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்து, தமிழகம் மட்டுமின்றி கேரளா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்று மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மண்பாண்ட தொழிலாளர்களால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் விற்பனை தற்போது களைகட்டி வருகிறது. செங்கோட்டை, இலஞ்சி பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் பானை, அடுப்பு போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது மண்பாண்டங்களின் பயன்பாடு மக்களிடையே குறைந்ததால் விநாயகர் சதுர்த்திக்கு 1 அடியிலிருந்து 12 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து உதிரி வருமானம் பெறுகின்றனர்.

ஆண்டு தோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்வதால் தங்களுக்கு உபரி வருமானமும் தொழில் பாதுகாப்பும் கிடைப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் . செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீடுகள் தோறும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து 6 முதல் 12 அடி வரை உயரம் உள்ள விநாயகர் சிலைகளை வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ரூ.1000 முதல் ரூ.50 ஆயிரம் வரை வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு வாங்கி செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து விநாயகர் சிலைகள் தயார் செய்யும் இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து நகர வீதிகளின் வழியாக ஊர்வலமாக திறந்த ஜீப், லாரிகளில் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர். இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்று சூழலை பாதுகாக்கும் வண்ணம் மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பர் கூல், ஜவ்வரிசி தண்ணீர் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்டு வெயிலில் காய வைத்து வர்ணம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் நெல்லை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர் போன்ற சுற்றுப்புற பகுதிகளுக்கும், கேரள, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பட்டு வருகின்றது என்று மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post சதுர்த்தி விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் விநாயகர் சிலை விற்பனை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: