சென்னை, புறநகரில் நேற்றிரவு பெய்த கனமழையால் 16 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சென்னை விமானநிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் உள்பட 16 விமானங்களின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் வருகை, புறப்பாடு தாமதம் காரணமாக பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகல் நேரங்களில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. பின்னர் இரவு 8 மணிக்குமேல் குளிர்ந்த காற்று வீசி, வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை, லேசான மழை என மாறி மாறி பெய்துகொண்டே இருந்தது. இதனால், சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்களின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. முன்னதாக, நேற்றிரவு 9.45 மணியளவில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல், திருச்சி விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மேலும், கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மும்பையில் இருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் போன்றவை தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து, வானிலை ஓரளவு சீரடைந்த பின்பு தாமதமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 2 கோலாலம்பூர் விமானங்கள், துபாய், குவைத், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லும் 5 சர்வதேச விமானங்கள், 2 மும்பை விமானங்கள், 2 ஐதராபாத் விமானங்கள் மற்றும் ஜெய்ப்பூர், பெங்களூர் ஆகிய 6 விமானங்கள் என மொத்தம் 11 உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனமழையால், சென்னை விமான நிலையத்தில் 5 வருகை விமானங்கள் மற்றும் 11 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 16 விமானங்களின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதில் ஒரு விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு காரணமாக வருகை, புறப்பாட்டில் இருந்த ஏராளமான பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post சென்னை, புறநகரில் நேற்றிரவு பெய்த கனமழையால் 16 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: