கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 110 கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக கடந்த வாரம் காப்பு கட்டுதல், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

கிராமங்களில் உள்ள பாமா, ருக்மணி உடனுரை கண்ணன், கிருஷ்ணன், பெருமாள் உள்ளிட்ட கோயில்களின் முன்பாக இரவில் பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் ஒருவாரம் கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று கோயில்களின் முன்பு பொங்கல் வைத்தல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. இரவில் கண்ணன் சப்பரம் வீதி உலா நடந்தது. வீடுகளில் குடும்பத்தாருடன் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மஞ்சள் நீர் தெளித்தல் மற்றும் சிறுவர், சிறுமியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது. மேலும் 55 கிராமங்களில் நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், திருவிளக்கு பூஜை, அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு வெளிநாடுகள், வெளிமாவட்டங்கள்,வெளியூர்களில் வேலை,படிப்பு நிமிர்த்தமாக சென்றவர்கள் விடுமுறைக்கு வந்து கொண்டாடியதால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொண்டி உந்தி பூத்த பெருமாள் சமேத தேவி, பூமாதேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் கண்ணன் சிலைக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. யாதவ மகாசபை சார்பில் அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: