திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் பணி பாதுகாப்பு வழங்கவேண்டும்

*ஆவின் பால் பவுடர் தொழிலாளர்கள் கோரிக்கை மனு

திருவண்ணாமலை : செங்கம் அருகே ஆவின் பால்பவுடர் தொழிற்சாலையில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், பணி பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதிேயார் உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனைப் பட்டா, சுய வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 319 பேர் மனு அளித்தனர். அதன்மீது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், செங்கம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் செயல்படும் ஆவின் பால் பவுடர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 2014ம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப்படையில், 200 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். பால் பவுடர் தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி குறைந்திருக்கிறது. அதனால், வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த பணியை வழங்க டெண்டர் அறிவித்துள்ளனர். தனியார் ஏஜென்சி ஒப்பந்தம் எடுத்தால், சுமார் 10 ஆண்டுகளாக வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு வேலை இழக்கும் நிலை ஏற்படும். எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

மேலும், தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தங்களுக்கு தானிப்பாடியில் இருந்து அத்திப்பாடி கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என மனு அளித்தனர். பஸ் வசதியில்லாததால், நீண்ட தூரம் நடந்து வர வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர்.இந்நிலையில், வரும் 27ம் தேதி அருணை பொறியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பிரசாரத்தை கலெக்டர் ெகாடியசைத்து தொடங்கி வைத்தார்.
மக்கள் குறைதீர்வு கூட்டத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

The post திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் பணி பாதுகாப்பு வழங்கவேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: