பெரியபாளையம் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

ஊத்துக்கோட்டை: மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலப்பாக்கம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியின் சாலையோரத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இத்தொட்டியின் அனைத்து தூண்களின் அடிப்பகுதியில் சிமென்ட் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து, அதில் உள்ள துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. மேலும், குடிநீர் தொட்டியின் அடிப்பாகத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டதில், அதன் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, தற்போது அத்தொட்டி பலம் இழந்து, தற்போது எந்நேரத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேறொரு இடத்தில் புதிதாக ஒரு மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தொட்டி மக்களின் குடிநீர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இதுவரை இடிக்கவில்லை.

இதனால் அதை சுற்றிலும் ஏராளமான முட்புதர் காடுகள் மண்டிக்கிடக்கின்றன. இதனால் அப்பகுதி வீடுகளுக்குள் பாம்பு உள்பட பல்வேறு விஷ ஜந்துக்கள் புகுந்து மக்களை பயமுறுத்தி வருகின்றன. எனவே, மெய்யூர் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத பழுதான மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி appeared first on Dinakaran.

Related Stories: