முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் மாமல்லபுரம் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை கல்வெட்டை எம்பி திறந்து வைத்தார்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே ரூ.4276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் 3வது ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த ஆலைக்கான கல்வெட்டை காஞ்சிபுரம் எம்பி செல்வம் திறந்து வைத்தார். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையொட்டி சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் 85.51 எக்கர் பரப்பளவில் தென் ஆசியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் 400 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் 3வது ஆலை ரூ.4276.44 கோடியில் பிரமாண்டமாக அமைய உள்ளது.

இதற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் வந்து அடிக்கல் நாட்ட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, பேரூர் பகுதியில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். இதில், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, திருப்போரூர் ஒன்றிய துணை சேர்மன் சத்யா சேகர், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணிசீமான், நெம்மேலி கவுன்சிலர் தேசிங்கு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் மாமல்லபுரம் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை கல்வெட்டை எம்பி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: