மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… பாவெல் பெருமிதம்

லாடர்ஹில்: இந்திய அணியுடன் நடந்த டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பாவெல் ‘எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை’ என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் நேற்று முன்தினம் நடந்த 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. சூரியகுமார் 61, திலக் வர்மா 27 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ 4, அகீல், ஹோல்டர் தலா 2, சேஸ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து அபாரமாக வென்றது. மேயர்ஸ் 10, பூரன் 47 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பிராண்டன் கிங் 85 ரன் (55 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), ஹோப் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. ரொமாரியோ ஆட்ட நாயகன் விருதும், நிகோலஸ் பூரன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இந்தியாவுக்கு எதிராக தொடரை வென்றது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பாவெல் கூறுகையில், ‘எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.

சொந்த மண்ணில் நடந்த பெரிய தொடரில், பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தியது சிறப்பானது. 4வது போட்டியில் மோசமாக தோற்றதும், அனைவரும் அமர்ந்து தீவிரமாக ஆலோசித்தோம். பதற்றம் அடையாமல் விளையாடுமாறு ஊக்குவித்த பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு நன்றி. பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு உத்வேகம் அளித்தது. நேரில் மட்டுமல்ல… சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தினர்’ என்றார்.

The post மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… பாவெல் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: