கோவை அருகே இன்று ஊருக்குள் புகுந்தது: வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி யானை அட்டகாசம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி, ஆட்டோவையும் சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சமயபுரம், சுக்கு காபி கடை உள்ளிட்ட பகுதிகள் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால், வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி யானை, மாடு, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இன்று(13ம் தேதி) அதிகாலை 4 மணி அளவில் சுக்கு காபி கடை அருகே உள்ள பிரபாகரன் நகர் பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை பாலாஜி என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. மேலும், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியது.

சப்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியேறிய பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் யானையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு அங்கிருந்து விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்கிருந்து செல்லவில்லை. அப்பகுதியில் பொதுமக்களும் கூடினர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை நீண்ட நேரம் போராடி வனத்திற்குள் விரட்டினர்.

The post கோவை அருகே இன்று ஊருக்குள் புகுந்தது: வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி யானை அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: