கேரளா செல்லும் வழியில் கோவை வந்தார் ஊட்டியில் தோடர் பழங்குடியின மக்களுடன் ராகுல் கலந்துரையாடல்: வருங்கால பிரதமர் என படுகர் இன பெண்கள் வாழ்த்து

ஊட்டி: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி நேற்று வயநாடு செல்லும் வழியில் கோவை வந்தார். பின்னர் ஊட்டியில் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து, கலந்துரையாடினார். கோத்தகிரி அருகே படுகர் இன பெண்கள் வருங்கால பிரதமர் எனக்கூறி வாழ்த்து தெரிவித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் அந்த தண்டனையை ரத்து செய்ததையடுத்து அவர் மீண்டும் எம்பியாக நாடாளுமன்றம் சென்று விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில் மீண்டும் எம்பியான பிறகு முதன்முறையாக ராகுல்காந்தி தனது வயநாடு தொகுதிக்கு நேற்று சென்றார். இதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் கோவை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக ஊட்டி வந்தார். கோத்தகிரி அருகே அரவேணு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் படுகர் இன மக்கள் அவரை வரவேற்க சாலையில் நின்றிருப்பதை பார்த்ததும் காரை விட்டு கீழே இறங்கினார். அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது படுகர் இன பெண்கள், ‘வருங்கால பிரதமர் ராகுல்காந்தி’ என வாழ்த்தினர்.
பின்னர், தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுடன் தேநீர் அருந்தினார்.

பின்னர், ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றார். அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து அவருடன் தேநீர் அருந்தினார். அங்கு நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் குறித்து கேட்டறிந்தார். அதன்பின், அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு கூடலூர் செல்லும் வழியில் ஊட்டி அருகள மூத்தநாடு மந்து பகுதிக்கு சென்றார். அங்கு, தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய ஆடையான பூத்துக்குளியை அவருக்கு அணிவித்தனர். அப்போது, காங்கிரஸ் கட்சியின் பழங்குடியின மாநில தலைவர் ப்ரியா நாஷ்மிகர், தோடர் பழங்குடியின தலைவர்களில் ஒருவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ் ஆகியோர் பாரம்பரிய எம்ப்ராய்டரி சால்வை கொடுத்து வரவேற்றனர்.

தோடர் பழங்குடியின மக்களின் குலதெய்வமான மூன்போ கோயிலுக்கு சென்றார். அவர்களுடன் கலந்துரையாடியபோது, தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவை குறித்து அவரிடம் விளக்கப்பட்டது. தோடர் பழங்குடியின இளைஞர்கள் சிலர் இளவட்ட கல்லை தூக்கினர். அதனை ரசித்த அவர், குழந்தைகளை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து ராகுல்காந்தியும் பாரம்பரிய நடனமாடினர். அபின்னர் கார் மூலம் கூடலூர் செல்லும் வழியில் முத்தநாடுமந்து பகுதிக்கு சென்று தோடர் பழங்குடியின மக்களை சந்தித்தார். தொடர்ந்து பாட்டவயல் வழியாக கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்றார்.

ஐ லவ் டிரைபிள்ஸ்
ஊட்டி அருகே தலைகுந்தா முத்தநாடு தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து திரும்பும் போது, செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ லவ் டிரைபிள்ஸ் (நான் பழங்குடியின மக்களை நேசிக்கிறேன்) என்றார். தொடர்ந்து, காரில் ஏறிச்சென்றார். தோடர் பழங்குடியின மக்கள் ஆதிகாலத்தில் குறிப்பிட்ட தாவர குச்சிகளை கொண்டு தீ மூட்டுவது வழக்கம். அதனை, நேற்று ராகுல்காந்தியிடம் செய்து காண்பித்தனர். அவரும் இளைஞர்களடன் சேர்ந்து இயற்கை முறையில் தீ மூட்டி மகிழ்ந்தார்.

The post கேரளா செல்லும் வழியில் கோவை வந்தார் ஊட்டியில் தோடர் பழங்குடியின மக்களுடன் ராகுல் கலந்துரையாடல்: வருங்கால பிரதமர் என படுகர் இன பெண்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: