திருச்சி: ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எலுமிச்சை, நெய் விளக்கு தீபமேற்றி வழிபட்டனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இன்று ஆடி கடைசி வெள்ளியாகும். இதனால் அம்மன் கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். சக்தி தலங்களில் முதன்மையான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடி எலுமிச்சை, நெய்விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில்களிலும் இன்று பக்தர்கள் அதிகளவில் குவிந்து தரிசனம் செய்தனர். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன், கரூர் மாரியம்மன், நாகை நெல்லுக்கடை மாரியம்மன், பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் திருவப்பூர் மாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
The post ஆடி மாத கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.
