பேரனை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி பாட்டி பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பேரனை காப்பற்ற முயன்றபோது, பாட்டி மின்சாரம் தாக்கி பலியானார். திருக்கழுக்குன்றம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுலோச்சனா (50). இவர் நேற்று காலை அங்குள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்க குடத்துடன் சென்றார். அப்போது, சுலோச்சனாவுடன் அவரது பேரன் (8ம் வகுப்பு படித்து வரும்) சபரிவாசன் (13) உடன் சென்றுள்ளான். தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென தெருவில் சென்ற உயர் மின் வயர் அறுந்து சபரிவாசன் மீது விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி துடித்ததைப்பார்த்த பாட்டி சுலோச்சனா, பேரனை காப்பாற்ற வயரிலிருந்து தூக்கி அப்புறப்படுத்தியபோது மின்வயர் சுலோச்சனாவின் காலில் சுற்றிக்கொண்டது.

இதில், மின்சாரம் தாக்கி சுலோச்சனா, சுருண்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மின்சாரம் தாக்கியதால் காயமடைந்த பேரன் சபரிவாசன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறான். இச்சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் திருக்கழுக்குன்றம் மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

* பொதுமக்கள் குற்றச்சாட்டு
அம்பேத்கர் தெருவில் மின்வயர்கள் தாழ்வாகவும், பழமையானதாகவும், மரங்களின் உரசல்களுடனும் இருப்பதாகவும் அதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மின் வாரியத்தினருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தனர். ஒருவேளை அவைகளை சரி செய்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று மக்கள் கூறினர். மின் வாரியத்தினரின் மெத்தனத்தால் இந்த விபத்து ஏற்பட்டதால் உயிரிழந்த சுலோச்சனாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

* திமுகவினர் அஞ்சலி
மின்சார பாய்ந்து உயிரிழந்த சுலோச்சனா, வடக்குபட்டு கிளை திமுக செயலாளர் வெங்கடேசன் என்பவரின் சகோதரி என்பதால் திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான யுவராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் சுலோச்சனாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் மின்வாரிய உயரதிகாரிகள் துறைரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பேரனை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி பாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: