டச்சு படையை மார்த்தாண்டவர்மா வென்ற குளச்சல் போர் வெற்றி நினைவு நாள்: ராணுவ வீரர்கள் மரியாதை

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது குளச்சல் துறைமுகம் சிறந்த வர்த்தக தளமாக விளங்கியது. இதை அறிந்த டச்சு படையினர் துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டனர். இதை அறிந்த திருவிதாங்கூர் மகராஜா மார்த்தாண்ட வர்மா கொல்லம் முற்றுகையை கைவிட்டு விட்டு, வேணாட்டின் தலைநகரம் கல்குளம் (இன்றைய பத்மாநாபபுரம்) வந்தார். பின்னர் படை தளபதிகளுடன் குளச்சல் கடற்கரைக்கு சென்றார். திருவிதாங்கூர் படையினருக்கும் டச்சு படையினருக்கும் கடுமையான சண்டை நடந்தது. 2 மாதம் நடந்த சண்டை 1741 ஜூலை 31 ம் தேதி முடிவுக்கு வந்து திருவிதாங்கூர் படை டச்சு படையை வென்றது.

கடற்கரையில் மாட்டு வண்டிகளில் பனை மரங்களை வெட்டி சாய்த்து வைத்து பெரிய பீரங்கி போன்று காட்சியளிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மா தந்திரம் செய்து டச்சு படையினரை சரணடைய செய்ததாக செவி வழி கதைகள் கூறுகிறது. இதற்கு குளச்சல் மீனவர்கள் மன்னருக்கு பெரும் உதவிகள் செய்தனர். இந்த போர் வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித்தூண் ஒன்றை நிறுவினார். இந்த தூண் மீது அமைந்துள்ள சங்கு சக்கரம் தான் இன்றும் குளச்சல் நகராட்சியின் முத்திரையாக உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது. குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த போர் வெற்றி தூண் வளாகம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

போர் வெற்றியை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போர்க்காட்சிகளை விளக்கும் சுவரில் புடைப்பு சித்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றித்தூணில் ஆண்டுதோறும் ஜூலை 31ம் தேதி மெட்ராஸ் ரெஜிமெண்ட் (திருவனந்தபுரம் பாங்கோடு) சார்பில் ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த போரில் வெற்றி பெற்று 282வது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று மெட்ராஸ் ரெஜிமெண்ட் பட்டாலியன் சார்பில் வெற்றி தூணில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக மெட்ராஸ் ரெஜிமெண்ட் 2 வது பட்டாலியன் வீரர்கள் நேற்று முன்தினம் குளச்சல் வந்தனர். அவர்கள் போர் வெற்றித்தூண் மற்றும் வளாகத்தை சுத்தம் செய்தனர். தொடர்ந்து வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. லெப்டின்ட் கர்னல் ரிதீஸ் பாஜ்பாய், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவவரம், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், டி.எஸ்.பி. தங்கராமன், நகராட்சி ஆணையர் விஜயகுமார், நகர்மன்ற தலைவர் நசீர், துணை பங்குத்தந்தை ஷாஜன், முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக உதவி இயக்குனர் சீனிவாசன் மற்றும் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

The post டச்சு படையை மார்த்தாண்டவர்மா வென்ற குளச்சல் போர் வெற்றி நினைவு நாள்: ராணுவ வீரர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: