திருச்சியில் வேளாண் சங்கமம் கண்காட்சி, கருத்தரங்கம்: விவசாயிகள் கலந்துகொள்ள கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் கண்காட்சி, கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கலந்துகொள்ள பயன்பெறுமாறு கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் வேண்டகோள் விடுத்து கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அளவிலான வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு திருச்சிராப்பள்ளி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை 29ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த கண்காட்சியில், சமீபத்திய விவசாய கண்டுபிடிப்புகள், சாகுபடி சம்மந்தமான புதிய தொழில் நுட்பங்கள், மதிப்பு கூட்டல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை விவசாயிகளுக்கு சிறந்த முறையில் எடுத்துரைக்கப்படும். மேலும், இந்த வேளாண் சங்கமத்தில் விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடல், செயல் விளக்கங்கள், கலைநிகழ்ச்சிகள் என 300க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய உணவு அரங்குகள், மானிய உதவிகள் பெற திட்டப் பதிவு ஆகியவை நடத்தப்பட உள்ளது.

பாரம்பரிய வேளாண் கருவிகளான நாட்டுக்கலப்பை, ஆட்டுக்கல், உரல், வல்லம், திருவை போன்ற பல வகையான பாரம்பரிய வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பாரம்பரிய நெல் இரகங்களின் விதைகள் மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, கருப்பு கவுணி, பிசினி, தங்கசம்பா, பூங்கார், காட்டுயாணம், இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை, கருடன் சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, மணிசம்பா, செங்கல்பட்டு சிறுகமணி, வால் சிவப்பு, குதிரைவாலி சம்பா, வாடன் சம்பா, கலியன் சம்பா, சம்பா மோசனம், காடை கழுத்தான் ஆகிய பாரம்பரிய நெல் இரகங்களின் விதைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும், விவசாயிகள் வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவன் செயலி அல்லது அக்ரிஸ்நெட் இணையதளத்தில் முன்பதிவு செய்து தரப்படும். வேளாண் திட்டங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் மற்றும் கையேடுகள் வழங்கப்பட உள்ளது. நடப்பு ஆண்டு 2023 ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து, கம்பு, ராகி, குதிரைவாலி, தினை, சாமை மற்றும் சோளம் விதைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. சிறுதானியங்கள் குறித்த சாகுபடி தொழில்நுட்பங்கள். மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல், கூடுதல் வருமானம் பெறுதல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

இக்கண்காட்சியில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் பல வகையான பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான வேளாண் சங்கமம் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தமான தொழில் நுட்பங்களை பெற்று பயனடையுமாறு வேண்டும் என கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

The post திருச்சியில் வேளாண் சங்கமம் கண்காட்சி, கருத்தரங்கம்: விவசாயிகள் கலந்துகொள்ள கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: