இடைவிடாது தொடர்மழை எதிரொலி அணைகள், ஏரிகளில் நீர் மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு

பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில் பெய்து வரும் இடைவிடாத தொடர்மழை எதிரொலியாக அணைகளிலும், ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பாலக்காடு மாவட்டத்தின் முக்கிய ஏரிகளான கம்பாலத்தரை, குன்னம்பிடாரி ஆகிய ஏரிகளில் மழைநீர் தேக்கமடைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. குன்னம் பிடாரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் நல்லேப்பிள்ளி, கல்லுக்குட்டியால், பொல்ப்புள்ளி வாய்க்காலில் தரைப்பாலங்கள் மூழ்கி, தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

கொடும்பை அடுத்த பொல்ப்புள்ளி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட அணக்கப்பாடம் தடுப்பு அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக மழை வெள்ளம் வெளியேறியது. இதனை வேடிக்கை பார்க்க கொடும்பு, பொல்ப்புள்ளி, எலப்புள்ளி கிராம மக்கள் திரண்டனர். பாலக்காடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாவே கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்திலுள்ள மலை கிராமங்களான அட்டப்பாடி, நெல்லியாம்பதி, பரம்பிக்குளம், சிறுவாணி, காஞ்ஞிரப்புழா ஆகிய இடங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அட்டப்பாடி பவானி, மன்னார்க்காடு குந்திப்புழா, ஸ்ரீ கிருஷ்ணபுரம் கரும்புழா, சித்தூர், பாலக்காடு, பட்டாம்பி ஆறுகளில் மழைவெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
பாலக்காடு மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் காஞ்ஞிரப்புழா 93.60 மீ., மலம்புழா 105.83 மீ., மங்கலம் 74.25 மீ., போத்துண்டி 96.02 மீ., மீங்கரை 150.42 மீ., சுள்ளியாறு 142.27 மீ., வாளையார் 196.35 மீ., சிறுவாணி 868.64 மீ, மூலத்தரை 181.65 மீ அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது.

The post இடைவிடாது தொடர்மழை எதிரொலி அணைகள், ஏரிகளில் நீர் மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: