மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா இன்று தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 52ம் ஆண்டு ஆடிப்பூர விழா 22ம் தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கி கருவறை அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் சித்தர் பீடம் வளாகத்தில் கஞ்சி வரவேற்பு நிகழ்ச்சியும், கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து காலை 10.15 மணிக்கு சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியை பங்காரு அடிகளார் கருவறையின் முன்பு உள்ள சுயம்பிற்கு அபிஷேகம் செய்து தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்துவருகின்றனர். இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

முன்னதாக இந்த ஆடிப்பூர விழாவினை முன்னிட்டு கடந்த 17ம் தேதி (திங்கட்கிழமை) சென்னை மாவட்டத்தைச் சார்ந்த பெரம்பூர் வழிபாட்டு மன்றத்தின் பக்தர்கள் சென்னையில் இருந்து பாதயாத்திரையாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். இந்தப் பாதயாத்திரை நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருள்மொழி, இசையமைப்பாளர் தேவா ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதியோர் நல மருத்துவர் நடராஜன், கண் மருத்துவர் திருவேங்கட கிருஷ்ணன் மற்றும் தஞ்சை மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்கத்தலைவர் வாசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா இன்று தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: