வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு புகார் அதிமுக மாஜி பேரூராட்சி தலைவி வீட்டில் விஜிலென்ஸ் போலீஸ் ரெய்டு

நாகர்கோவில்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தினர். நாகர்கோவில் சுங்கான்கடையை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ரோஸ்லின் பிரேமலதா என்ற லதா சந்திரன், கடந்த 21.10.2011 முதல் 30.10.2016 வரை, ஆளூர் பேரூராட்சி தலைவியாக இருந்தார். இவர், ஆளூர் பேரூர் அதிமுக செயலாளர் பொறுப்பிலும் இருந்து வந்தார். ஆளூர் பேரூராட்சி, நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது வீரநாராயணசேரி கூட்டுறவு சங்க தலைவியாக இருக்கிறார்.

இந்தநிலையில் லதா சந்திரன், பேரூராட்சி தலைவியாக இருந்த காலத்தில் பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைதொடர்ந்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீசார் லதா சந்திரன் வீட்டுக்கு நேற்று காலை 6 மணிக்கு சென்று சோதனையை தொடங்கினர். இந்த சோதனை மாலை வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு புகார் அதிமுக மாஜி பேரூராட்சி தலைவி வீட்டில் விஜிலென்ஸ் போலீஸ் ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: