செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை அமலாக்க துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை: மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் காரசார வாதம்

சென்னை: அமலாக்க துறைக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மட்டுமே முடியுமே தவிர கைது செய்யும் அதிகாரம் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் தரப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா, தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இரு நீதிபதிகள் அமர்வில், எந்தெந்த கருத்துக்களில் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து மேகலா தரப்பிலும், அமலாக்க துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்ட பின், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்ற விஷயத்திலும், காவலில் வைத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா என்ற அம்சங்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கைதுக்கான காரணங்களை மூத்த நீதிபதியான நிஷாபானு கையாளவில்லை எனவும், இளைய நீதிபதியான பரத சக்கரவர்த்தி கையாண்டுள்ளதால் இந்த அம்சத்தில் நீதிபதிகள் முரண்பட்டுள்ளனர் என கூறமுடியாது என அமலாக்க துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

அதேபோல கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறை சட்டம் 41 ஏ பிரிவு, அமலாக்க துறைக்கு பொருந்துமா என்பது குறித்து இரு நீதிபதிகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் அதுகுறித்த வாதங்களை முன் வைக்க கூடாது எனவும் துஷார் மேத்தா குறிப்பிட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என 3 கேள்விகளை தீர்மானித்து, விசாரணையை ஜூலை 11, 12ம் தேதிகளில் நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும்போது, பணபரிமாற்ற தடை சட்டத்தில் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள் சேகரித்த பின்னர் அவரை கைது செய்ய அமலாக்க துறைக்கு அதிகாரம் இல்லை. அமலாக்க துறையிடம் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் கைதுக்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும். கைதுக்கான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்’ என்றார். நீதிபதி: கைது செய்ய முடியுமா?, அதன்பிறகு காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா? கபில் சிபல்: அமலாக்க துறை போலீஸ் ஆகாது. சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தில் பிரிவு 13ன்படி அமலாக்க துறை துணை இயக்குனருக்கு விசாரிக்க மட்டுமே முடியும். விசாரணை முடிந்தவுடன் சம்மந்தப்பட்ட மாஜிஸ்திரேட் முன்பு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
நீதிபதி: அமலாக்க துறை அதிகாரிகளை சோதனை அதிகாரிகள் என்றுதானே சட்டம் சொல்கிறது.

கபில் சிபல்: சோதனை நடத்த அதிகாரம் உள்ளது. கைது செய்ய அல்ல. குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் அவரை நீதிமன்ற காவலில் வைக்க முடியும். ஆனால், போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட முடியாது. நீதிபதி: நீதிமன்ற காவலில் இருக்கும்போது எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும். கபில் சிபல்: கைதே சட்ட விரோதம் என்னும்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும். அவர்கள் விசாரணை அதிகாரிகள் மட்டுமே. இதை உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உறுதி செய்துள்ளது.தொடர்ந்து வாதம் நடைபெறுகிறது.

The post செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை அமலாக்க துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை: மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் காரசார வாதம் appeared first on Dinakaran.

Related Stories: