ஆனி கடைசி முகூர்த்தம், விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

*நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் : ஆனி மாத கடைசி முகூர்த்தம் மற்றும் விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூசம் மற்றும் வைகாசி விசாகத் திருவிழாக்களில் விரதமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும்.

இந்நிலையில் நேற்று ஆனி மாத கடைசி முகூர்த்தம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புதுமண தம்பதிகள் பலர் கோயிலுக்கு வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் உற்சாகமாக புனித நீராடி நாழி கிணறு தீர்த்தத்தில் குளித்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மற்ற பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன.

கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லக்கூடிய கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழி என அனைத்து வழிகளிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒருசில பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விடுமுறை தினத்தையொட்டி கடற்கரை, நாழிகிணறு, கோயில் வளாகம், ரதவீதிகள், பஸ் நிலையம் என எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே தென்பட்டனர். ரதவீதிகளில் பக்தர்கள் மற்றும் அவர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அவற்றை ஒழுங்குபடுத்தினர். வழக்கத்தை விட கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு இருந்தது.

The post ஆனி கடைசி முகூர்த்தம், விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: