10 தானியங்கி கேமராக்கள் அமைத்தும் புலி சிக்கவில்லை கூண்டு அமைத்து காத்திருக்கும் வனத்துறை

*சிற்றார் வனப்பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

அருமனை : சிற்றார் சிலோன் காலனியையொட்டிய வனப்பகுதியில் 10 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைத்தும் கேமரா காட்சிகளில் புலி சிக்காத நிலையில், அந்த பகுதியில் கூண்டு அமைத்து வனத்துறை கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் சிற்றார் அருகே அரசு ரப்பர் கழக கோட்ட மேலாளர் அலுவலகம் அருகே புலி ஒன்றை பார்த்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் குடியிருந்து வருகின்ற மோகன் ராஜ் என்பவரும் அந்த பகுதியில் உள்ள மாடசாமி கோயில் அருகே புலி ஒன்றை பார்த்ததாக கூறியுள்ளார்.
சிற்றார் சிலோன் காலனி மல்லன் முத்தன்கரை காளி கோயில் அருகே ஆடு ஒன்றை புலி உண்ணும் காட்சியை தொழிலாளி ஒருவர் நேரில் பார்த்துள்ளார். மேலும் நேற்று முன்தினம் காலையில் தனலட்சுமி என்பவருடைய வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு காணாமல் போன நிலையில் ஆட்டின் இரைப்பை பகுதி காட்டின் ஒரு பகுதியில் காணப்பட்டது.

களியல் வனச்சரகர் முகைதீன் தலைமையிலான குழு சிற்றார் வனப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்தது. அதில் புலி, ஆட்டை இழுத்துச் சென்ற வழித்தடங்களை பார்வையிட்டு கால் தடங்களை ஆராயும் போது புலியின் நடமாட்டம் இருப்பதையும் உறுதி செய்தனர். இதனால் அப்பகுதியில் 10 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலையில் தானியங்கி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் புலியின் நடமாட்டம் ஏதும் தென்படவில்லை.

புலி ஒருமுறை வேட்டையாடிவிட்டால் அடுத்த 2, 3 நாட்களுக்கு வேட்டையாடாது. மேலும் அது ஒரே இடத்தில் இருந்து கொண்டு வேட்டையாடிக்கொண்டும் இருக்காது. இடம்பெயர்ந்து கொண்டும் இருக்கும்.எனவே புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அகற்கேற்ப கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படும். தொடர்ந்து புலி வழித்தட பகுதிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறோம் என்று வனத்துறையினர் கூறியிருந்தனர். இதற்கிடையே சிற்றார் சிலோன் காலனியையொட்டிய வனப்பகுதியில் புலியை பிடிப்பதற்கான கூண்டு அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.

The post 10 தானியங்கி கேமராக்கள் அமைத்தும் புலி சிக்கவில்லை கூண்டு அமைத்து காத்திருக்கும் வனத்துறை appeared first on Dinakaran.

Related Stories: