வியாசர்பாடியில் உள்ள பழமைவாய்ந்த கரபாத்திரா சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே சாமியார் தோட்டம் 1 வது தெருவில் கரபாத்திரா சுவாமிகள் கோயில், மடாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த மடாலயத்தின் மேம்பாட்டு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது கோயிலை சுற்றி எந்தெந்த பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்தும் கோயில் குளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; வடபழனி ஆண்டவர் முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள வியாசர்பாடி கரபாத்திர கோயிலில் ஆய்வு பணிகள் மேற்கொண்டோம். இந்த கோயிலுக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சில குறிப்பிட்ட இடங்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.

மீதம் உள்ள இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த மடலாயத்தை பொறுத்தவரை மகா குருபூஜை, பவுர்ணமி பூஜை விசேஷமாக கருதப்படுகிறது.இந்த கோயிலில் பல்வேறு ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை உறுதுணையாக இருக்கும். வாரம் ஒரு முறை அன்னதானம் செய்யப்பட்டு வரும் இந்த கோயிலில் நாள்தோறும் அன்னதான நிகழ்ச்சி நடைபெறுவதையும் அதற்கான பணிகளும் படிப்படியாக உறுதி செய்யப்படும். அடிப்படை கட்டமைப்பு வசதி, தியானகூடம், அன்னதான கூடம், மடப்பள்ளி என 10 திருப்பணிகளை மேற்கொள்ள இந்த சமய அறநிலை துறை முடிவு செய்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறையில் திமுக ஆட்சி அமைத்தபிறகு நிதிகள் ஒதுக்கப்பட்டு முறையாக இத்துறை செயல்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 200க்கும் மேற்பட்ட பண்டைய கால கோயில்கள் புனரமைக்கும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது. கடந்த காலங்களில் கேட்பாரற்று கடந்த கோயில்களையும் இந்த ஆட்சியில் சரிசெய்யும் பணிகளை செய்து வருகிறோம். வடபழனி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள கரபாத்திர மடாலயத்தை வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயிலுடன் இணைக்க வேண்டாம் என்பது இந்து சமய அறநிலையதுறையின் முடிவு. அது எப்படி இருக்கிறதோ அப்படியாகவே இருக்கட்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட செயலாளர் இளைய அருணா. மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், 37 வது மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாநிதி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post வியாசர்பாடியில் உள்ள பழமைவாய்ந்த கரபாத்திரா சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: