6 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா: விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

மதுரை: கோவிலாங்குளம் ஊராட்சியை சேர்ந்த 6 கவுன்சிலர்கள், கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க ஊராட்சி உதவி இயக்குநருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஒன்றியத்தில் கோவிலாங்குளம் ஊராட்சி தலைவியாக ஜெயந்தி உள்ளார். 12 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், கவுன்சிலர்களான தனம், ஜெயக்கொடி, ஜெயலட்சுமி, பஞ்சு, தங்கச்சாமி, பாண்டியராஜன் ஆகிய 6 பேர் நேற்று, மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில், ‘கோவிலாங்குளம் ஊராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இங்கு தொடர்ந்து 25 வருடமாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. விளைநிலங்கள் வீட்டடி மனைகளாக மாற்ற அனுமதி கொடுக்கப்படுகிறது. கேள்வி கேட்கும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வேன் என மிரட்டல் விடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், எங்களது வார்டு கவுன்சிலர் பதவிகளை ராஜினாமா செய்கிறோம்’ என தெரிவித்திருந்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் அமர்நாத்துக்கு கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார். அதன்படி ஊராட்சி தலைவி மற்றும் செயலாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.

The post 6 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா: விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: