மகாராஷ்டிராவில் கோர விபத்து பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து 25 பயணிகள் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில், புனே நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பயணிகள் உடல் கருகி பலியாகினர். படுகாயமடைந்த 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நோக்கி தனியார் பஸ் ஒன்று 33 பயணிகளுடன் நாக்பூர்-மும்பை சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 1.30 மணி அளவில், புல்தானா மாவட்டம் சிந்த்கேட்ராஜா பகுதி அருகில் இருக்கும் பிம்பல்குட்டா என்ற கிராமத்திற்கு வரும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கம்பம் ஒன்றின் மீது பஸ் மோதியது.

பின்னர் விரைவுச் சாலையில் உள்ள சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் பஸ் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து அதிர்ச்சியில் அலறித் துடித்தனர். சிலர் பஸ்சின் பின்பக்க ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியில் வந்தனர். அடுத்த சில நொடிகளில் பஸ் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. தகவலறிந்த போலீசார், தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வருவதற்குள் பஸ் முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில், தீயில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து, இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பலரது உடல்கள் முழுவதுமாக கருகி இருப்பதால், டிஎன்ஏ சோதனையின் மூலம் அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், எதிர்கட்சி தலைவர் அஜித் பவார் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* நிவாரண நிதி
விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஷிண்டே, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று காலை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். இதே போல பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

* விபத்து நடந்தது எப்படி?
இந்த சம்பவம் குறித்து புல்தானா மாவட்ட போலீஸ் எஸ்பி சுனில் கடாஸ்னே கூறுகையில், ‘‘பஸ் மணிக்கு 60-70 கிமீ வேகத்திலேயே வந்துள்ளது. இதனால் வேகமாக வந்ததால் விபத்து ஏற்படவில்லை. இது முழுக்க முழுக்க மனித தவறால் நடந்த விபத்து. டிரைவரின் அஜாக்கிரதையால் விபத்து நடந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. இதுதொடர்பாக பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிரைவர் கூறியது போல் பஸ் டயர் வெடித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றார். விபத்தின் போது, தனது கட்டுப்பாட்டை பஸ் இழந்ததை அறிந்த டிரைவர், கிளீனரை எச்சரித்துள்ளார். பின்னர் பஸ் கவிழ்ந்ததும், டிரைவரும் கிளீனரும், பஸ்சின் ஜன்னலை உடைத்து தப்பி உள்ளனர். காயத்துடன் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post மகாராஷ்டிராவில் கோர விபத்து பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து 25 பயணிகள் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: