திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி குரு பவுர்ணமி கிரிவலம் பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்பு

* முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
* கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் குரு பவுர்ணமி கிரிவலம் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை நினைக்க முக்தித்தரும் அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்த அருள்நகரமாகும். எனவே, மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

அதன்படி, திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 2ம் தேதி இரவு 7.45 மணிக்கு தொடங்கி, 3ம் தேதி மாலை 5.48 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த பவுர்ணமி குரு பவுர்ணமி என அழைக்கப்படுகிறது. எனவே, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, குரு பவுர்ணமிக்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், எஸ்பி கார்த்திகேயன், ஏடிஎஸ்பி பழனி, டிஎஸ்பிக்கள் குணசேகரன், ரமேஷ்ராஜ், ஆர்டிஓ மந்தாகினி, அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கலெக்டர் முருகேஷ் தெரிவித்ததாவது: குரு பவுர்ணமியை முன்னிட்டு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 14 கிமீ தூரமுள்ள கிரிவலப்பாதையிலும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாதபடி ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

கிரிவல பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும். கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டாமல், பிற நகராட்சி, ஊராட்சிகளில் இருந்து தூய்மைப்பணியாளர்களை பணியமர்த்தலாம்.
பக்தர்கள் எவ்வித சிக்கலும், சிரமமும் இல்லாமல் வந்து செல்ல வசதியாக, அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

அதற்கான, நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கிரிவலப்பாதையில், மின் விளக்குகள் சரியாக எரிகிறதா என மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். தடையில்லா மின் சப்ளை வழங்குவதை உறுதி செய்வது அவசியம். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவகங்கள், அன்னதானம் வழங்கும் இடங்களில் உணவு பாதுகாப்ப அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடப்பதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருவழிகளிலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் விரைந்து தரிசனம் செய்ய கோயில் நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கிணைந்து திட்டமிட வேண்டும்.

போக்குவரத்துக்கம், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், பேனர்களை அகற்ற அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி குரு பவுர்ணமி கிரிவலம் பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: