தீரன் சின்னமலையின் போர் பயிற்சி பாசறை, கட்டிடம் பாதுகாக்கப்படுமா?

காங்கயம் : விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஊர் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையம். தீரன் சின்னமலை தினமும் வழிபட்டதாக கருதப்படும் மிகப்பெரிய விநாயகர் சிலை இன்றளவும் அங்கு அமைந்துள்ளது. இதேபோல், சிவன்மலை மலை அடிவாரத்தில் தீரன் சின்னமலை வீரர்களை தங்க வைத்து போர் பயிற்சி அளித்த பாசறையின் பழைய கட்டுமானங்கள் இன்றளவும் உள்ளது. இதனை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், வரலாற்று ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், நத்தக்காடையூர் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் கி.பி.1756 அன்று தீரன் சின்னமலை பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும். இவர் இளம் வயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர் பயிற்சியை சிவந்தாரையர் என்பவரிடம் கற்றுத் தேர்ந்தார்.

பயிற்சி செய்யும் முன், மேலப்பாளையத்தில் தனக்கென ஒரு விநாயகரை வைத்து தினமும் வழிபட்டும் வந்துள்ளார். கொங்கு நாடு, அப்பொழுது மைசூர் ஆட்சியின் கீழ் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு சென்றது. ஒருநாள் வேட்டைக்கு சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்கு செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு விநியோகித்தார். அப்போது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக சொல் என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல் தீர்த்தகிரிக்கு சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று. இதே காலகட்டத்தில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டன் கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார்.

இன்றைய கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய படைகள் ஒன்று சேர்ந்து விடாமல் இடையில் பெரும் தடையாக சின்னமலை விளங்கினார். ஐதர் அலியின் மறைவிற்கு பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார்.

சின்ன மலையின் படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையரின் படைகளுக்கு தீரன் சின்னமலையின் படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. இவ்வளவு சேதத்தை உண்டாக்கிய தீரன் சின்னமலையின் படைகள் தற்போதைய காங்கயம் அறச்சலூர் ஓடாநிலை பழனி உள்ளிட்ட பகுதிகளில் பாசறைகள் அமைத்து போர் பயிற்சி மேற் கொண்டுள்ளனர் என வரலாற்று தரவுகள் உள்ளன.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை அடிவார பகுதியை ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் நிலங்களை வாங்கிய தீரன் சின்னமலை படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாசறை ஒன்றை நிறுவியுள்ளார். அங்கு வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்துள்ளார். மேலும், அங்கு அவர் பயன்படுத்திய பாசறையின் சிதைந்த பகுதிகளும், நுழைவு வாயிலும் இன்றளவும் உள்ளது.

தற்போது அவ்விடத்தில் பழைய செங்கற்களை கொண்டு நுழைவு வாயிலும், கருங்கற்களை கொண்டு சுற்றுச்சுவரும் அதனை பாதுகாக்க சுண்ணாம்பால் காரை பூசப்பட்டுள்ளது. மேலும், பாசறை நுழைவு வாயில் பழைய முக்கால் அடி செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. பாசறையின் சுற்றுச்சுவரானது மிக நேர்த்தியாகவும் உறுதியுடனும் கட்டப்பட்டுள்ளதை இன்றளவும் காண முடிகிறது. தீரன் சின்னமலை தனது வீரர்களுக்கு பாசறை அமைத்து போர் பயிற்சி அளித்து திப்புவின் படைக்கு துணையாக ஆங்கிலேய படைகளை பல போர்களில் தோற்கடிக்க காரணமாக இருந்த இடம் தற்போது பாழடைந்து மரங்கள் முளைத்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது.

சிதைத்தும், அழிக்கப்பட்டும் கட்டுமானம் உடைக்கப்பட்ட நிலையில், மீதமிருப்பது பாசறையின் நுழைவு வாயில் மட்டுமே. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும், அவர்களுக்கு வரி செலுத்த முடியாது என மறுத்து அவர்களை எதிர்த்து மருது சகோதரர்களுடனும், திப்பு சுல்தானுடனும் இணைந்து போர் புரிந்து பின்னர் ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு 1805ம் ஆண்டு சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். தீரன் சின்னமலை பாசறை அமைத்து வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்த இடம் புதர் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. எனவே, இவ்விடத்தை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தீரன் சின்னமலையின் போர் பயிற்சி பாசறை, கட்டிடம் பாதுகாக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: