திருச்சி உறையூர் மார்க்கெட்டில் மேயர் ஆய்வு சாலையோர வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

திருச்சி திருச்சி உறையூரில் மார்க்கெட்டில் நேற்று ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் அன்பழகன் சாலையோரத்தில் கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளிடம் மார்க்கெட்டின் உள்ளே கடைகளை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது மேயர் நேரிடையாக சென்று களஆய்வு செய்து குறைகளை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி உறையூரில் அமைந்துள்ள மார்க்கெட்டில் காய்கறி, இறைச்சி மற்றும் மீன் கடைகள் உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்நிலையில் மார்க்கெட் இடத்தினை விட்டுவிட்டு சாலையோரத்தில் காய்கறி கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.

புகாரை தொடர்ந்து, மேயர் அன்பழகன், கோ.அபிஷேகபுரம் மண்டலம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், மண்டலத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று உறையூர் மார்க்கெட் சென்று ஆய்வு நடத்தினர். மார்க்கெட்டில் போதிய இடவசதி இருப்பதை அறிந்தனர். தொடர்ந்து, மெயின்ரோடு வந்து மேயர் அன்பழகன், சாலையோரம் கடை அமைத்திருந்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மாநகராட்சி மார்க்கெட்டில் கடை அமைத்து வியாபாரத்தை நடத்தி கொள்ளுங்கள் என்றார். அதுபோல் பஞ்சவர்ணசாமி கோவில் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இருப்பதால் அங்குள்ள சாலையோர வியாபாரிகளிடமும் வரும் 26ம் தேதிக்குள் உறையூர் காய்கறி மார்க்கெட்டில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து கொள்ள அறிவுறுத்தினார்.

 

The post திருச்சி உறையூர் மார்க்கெட்டில் மேயர் ஆய்வு சாலையோர வியாபாரிகளுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: