மாவட்ட தொழில் மையம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். அப்போது பேசிய மாவட்ட கலெக்டர், அரசு வழங்கும் சுயதொழில் ஊக்குவிப்பு மானியங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சரியான முறையில் சென்று சேர்வதில்லை என்பதாலும் அவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில்லை என்பதாலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின் படி திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கிகளை பொறுத்த வரை கடன் தேவைப்படுபவருக்கு உடனடியாக கடன் கிடைப்பதில்லை. கடன் தேவையில்லாதவர்களுக்கு அதிகமாக கடன் கிடைக்க வாய்ப்புகள் அமையும். இந்த நிலையை போக்கி தேவையானவர்களுக்கு தேவையான கடனுதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது தான் இந்த திட்டம். எனவே, தொழில் துவங்க விருப்பமுள்ள சாதிக்க துடிக்கின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு உரிய வாய்ப்பளிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டத்தை பொருத்தவரைக்கும் 65 சதவிகிதம கடன் உதவியாகவும் 35 சதவிகிதம் அரசு மானியமாகவும் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் மாவட்ட தொழில் மையத்தை அணுகினால் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதரப்படும். ஆகையால் இந்த அறிய வாய்ப்பை அனைவரும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுமார் ஒரு லட்சம் கடன் பெற்றால் அதனை உரிய முறையில் அடைத்து 5 லட்சம் மதிப்பிலான கடனைப் பெற்று தொழிலை விரிவுபடுத்தி ஐந்து லட்சத்தை அடைத்து மேற்கொண்டு அதிகமான கடனைப் பெற்று தன் தொழிலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இதற்காக மாவட்ட நிர்வாகமும் மாவட்ட தொழில் மையமும் உங்களுக்கு உதவுவதற்கு எப்பொழுதும் தயாராக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றார். தொடர்ந்து, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திட்ட விளக்க கையேட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சேகர், தாட்கோ மாவட்ட மேலாளர் இந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயமாலா, ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு மாவட்ட தலைவர் முருகேசன், டிஐசிசிஐ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகதாஸ், தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பு மாநில தலைவர் பழங்குடி பாலு, தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குநர் எழில் செல்வன், தொழில் முனைவோர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட தொழில் மையம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: