அமித்ஷா பேச்சுக்கு பதிலடி மக்களை நம்பியுள்ள எங்களுக்கு பாஜ ஆதரவு தேவையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆவேசம்

திருமலை: சமூக நீதிக்கும்- அநீதிக்கும் போர் நடக்க உள்ளது. மக்களை நம்பியுள்ள எங்களுக்கு பாஜ ஆதரவு தேவை தேவையில்லை என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்து பேசினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் மட்டுமே செய்துள்ளது’ என குற்றம்சாட்டி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யாருடைய கூட்டணியும் எனக்கு தேவையில்லை என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் நேற்று பள்ளிகளில் இந்த கல்வியாண்டிற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது.

விழாவில், முதல்வர் ஜெகன்மோகன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி பேசியதாவது: ஏழை குழந்தைகள் மற்றும் ஏழை குடும்பங்கள் படித்தால் சந்திரபாபுவுக்கு பிடிக்காது. அவர்கள் ஆங்கில மீடியத்தில் படித்தால், அவர்களுக்கு டிஜிட்டல் கல்வி கிடைத்தால் பொறுத்து கொள்ளமாட்டார். அதுதான் சந்திரபாபுவின் மனநிலை. ஏழைகள் முன்னேறக்கூடாது என்ற எண்ணம் எப்போதும் சந்திரபாபுவிடம் உள்ளது. முதல்வர் பதவியில் இருந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் சந்திரபாபுவின் பெயரை சொன்னால் அவர் செய்த ஒரு நல்ல பணியும் நினைவுக்கு வராது. தெலுங்கு தேசம் கட்சி கடையை மூட தயாராக உள்ளது. சமூக நீதிக்கும்- அநீதிக்கும் போர் நடக்க உள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த அரசு கொண்டு வந்த திட்டத்தால் பலன் கிடைத்துள்ளதை அறிந்து, இந்த அரசுக்கு போர் வீரர்களாக மாற வேண்டும். ஜெகனை பாஜ ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால், ஜெகன் யாரையும் நம்பவில்லை. கடவுளின் ஆசீர்வாதத்தையும், மக்களின் நம்பிக்கையையும் மட்டுமே நம்புகிறோம். தவறான பிரசாரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.

The post அமித்ஷா பேச்சுக்கு பதிலடி மக்களை நம்பியுள்ள எங்களுக்கு பாஜ ஆதரவு தேவையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: