சட்டப்பேரவை தேர்தல் மபி.யில் பிரியங்கா இன்று பிரசாரம் தொடக்கம்

ஜபல்பூர்: மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். மத்தியபிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் 15 ஆண்டுகால ஆட்சியை அகற்றி விட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இதையடுத்து பாஜ மீண்டும் ஆட்சியமைக்க சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளதால், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தற்போதே தயாராகி வருகிறது. காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். காலை 10 மணிக்கு நர்மதா நதிக்கரையில் பிரியங்கா காந்தி பிரார்த்தனை செய்கிறார். தொடர்ந்து ஜபல்பூரில் 8 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளும் பிரியங்கா காந்தி, முகலாயயர்களுடன் போராடி வீரமரணமடைந்த ராணி துர்காவதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார். இந்த பேரணியில் குறைந்தது இரண்டு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியின் முடிவில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திலும் பிரியங்கா காந்தி உரையாற்ற உள்ளார்.

The post சட்டப்பேரவை தேர்தல் மபி.யில் பிரியங்கா இன்று பிரசாரம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: