தையூர் – கோவளம் கூட்டுக்குடிநீர் திட்ட விவகாரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம்

 

திருப்போரூர். ஜூன் 11: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தையூர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் இருந்து 5 கிணறுகள் மூலம் தையூர் மற்றும் கோவளம் ஊராட்சிகள் பயன் பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தமிழ்நாடு அரசு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கு தையூர் ஊராட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடந்த கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி தையூர் ஏரியில் கிணறுகள் தோண்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டபோது வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் முற்றுகைப்போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அரசு அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படாததால் பணிகள் நிறுத்தப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நேற்று திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையிலும், மக்களின் கருத்தை கேட்கும் வகையிலும் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன், பள்ளிக்கரணை காவல் இணை ஆணையர் ஜோஸ் தங்கையா, கேளம்பாக்கம் உதவி ஆணையர் இரவிக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது. தையூர் ஏரி மாவட்டத்திலேயே பெரிய ஏரிகளுள் ஒன்றாக உள்ளது. ஆகவே, அதை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும். அதன் பிறகு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வது போல் எடுத்துச் செல்லலாம். ஆனால், கிணறு அமைத்து எடுத்துச் செல்லக்கூடாது. தேவைப்பட்டால், நீர்த்தேக்கம், தடுப்பணை அமைத்துக் கொள்ளுங்கள். தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதியின்றி செயல்படுகின்றன. இவற்றை முறைப்படுத்த வேண்டும். டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துச்செல்வதை தடை செய்ய வேண்டும். தையூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க வேண்டும். தையூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களை கண்டறிந்து போதிய குடிநீர் வழங்க வேண்டும்.

இ-சேவை மையம் அமைக்க வேண்டும், பேருந்து நிலையம், சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்டத்தில் இவ்வளவு பெரிய ஏரியை எந்த ஆக்கிரமிப்பும் இல்லாமலும், கழிவுநீர் கலக்காமலும் பாதுகாத்து வைத்து இருப்பதற்கு முதலில் நான் நன்றிகளையும், பாராட்டுகளையும் தையூர் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டம் கோவளம் ஊராட்சிக்கு மட்டும் செயல் படுத்தவில்லை. ஐந்து கிணறுகளில் 3 கிணறுகள் தையூர் ஊராட்சிக்கும், 2 கிணறுகள் கோவளம் ஊராட்சிக்கும் வழங்கப்படும். கோவளம் கிராமம் கடலை ஒட்டி இருப்பதாலும், அங்கு உப்பு நிறைந்த நீரை இருப்பதாலும் அருகில் உள்ள தையூரில் இருந்து குடிநீர் எடுத்து வழங்குகிறோம். தையூர் கிராம மக்கள் கூறி உள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து உரிய துறை அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆகவே, இந்த நல்ல திட்டத்தை செயல்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி, தையூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

The post தையூர் – கோவளம் கூட்டுக்குடிநீர் திட்ட விவகாரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: