செய்யூர் சட்டமன்ற தொகுதியில் 98 லட்சத்தில் அரசு பள்ளிக்கு அடிக்கல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

 

திருக்கழுக்குன்றம், ஜூன் 11: செய்யூர் சட்டமன்ற தொகுதியில் ₹98 லட்சத்தில் அரசு பள்ளிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லிபுரம் ஊராட்சியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 161 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2018ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்டி தரவேண்டும் என செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் வல்லிபுரம் ஊராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிகேசவ பெருமாள் கோயில் அருகே 4.5 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கீடு செய்து, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ₹98 லட்சத்தில் அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதையடுத்த, பள்ளி கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. பனையூர் பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.டி.அரசு முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சோபியா அமுல் பார்த்தசாரதி வரவேற்றார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரசு உயர்நிலை பள்ளி கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து, ஊராட்சி துணைத் தலைவர் அம்பிகா சீனிவாசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகம் பொருளாளர் சக்கரவர்த்தி, ஊராட்சி செயலாளர் ஜோதி பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செய்யூர் சட்டமன்ற தொகுதியில் 98 லட்சத்தில் அரசு பள்ளிக்கு அடிக்கல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: