கே.எஸ்.அழகிரியை அவமதிக்கும் வகையில் பதிவு காங்கிரசில் இருந்து நிர்வாகிகள் சிலரை நீக்க பரிந்துரை: ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் மாவட்ட தலைவர் புகார்

சென்னை: கே.எஸ்.அழகிரியை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரை கட்சியிலிருந்து நீக்க கோரி ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் மனு அளித்தார். வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் மீது காங்கிரஸ் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கட்சியின் மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தியிடம், வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அனுப்ப கோரி புகார் மனு அளித்தார்.

அப்போது, 50க்கும் மேற்பட்ட வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக, வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் நிருபர்களிடம் கூறியதாவது: கே.எஸ்.அழகிரியின் பெயரை அவமதிக்கும் வகையில் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சிலர் நடந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. தேர்தல் காலக்கட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் உத்தரவுபடி தான் திமுகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அதை விமர்சிப்பதையே வேலையாக வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரையும் தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மீறி செயல்படுவதால் நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு மனு அளிக்கிறோம். ஏற்கனவே ஒருமுறை மனு அளித்த போது அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இப்போது 2வது முறையாக காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுகளை மீறுகிற வகையில் மாநில தலைவரை அவமதித்துள்ளனர். அவர்களை, அவர்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவித்து, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கே.எஸ்.அழகிரியை அவமதிக்கும் வகையில் பதிவு காங்கிரசில் இருந்து நிர்வாகிகள் சிலரை நீக்க பரிந்துரை: ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் மாவட்ட தலைவர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: