அன்பு மனைவிக்கு கணவன் தந்த பரிசு கப்பலில் கூட்டி போக சொன்னா கப்பலே வீடா கொடுத்திட்டாரு…

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் சுந்தரம். மீனவர். இவரது மகன் சுபாஷ். இவர் கடந்த 2006 முதல் சரக்கு கப்பலில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுப. தம்பதிக்கு சுருதி (11), சுதிக் ஷா (8) என 2 மகள்கள் உள்ளனர். சுபாஷ் கப்பலில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். விடுமுறைக்கு மட்டுமே கடலூருக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், சுபாஷ் பணிபுரியும் கப்பலில் தங்களையும் அழைத்துச் செல்லுமாறு அவரது மனைவி சுப கேட்டுள்ளார். ஆனால் சரக்கு கப்பலில் பயணிப்பது உடல் ரீதியாக சில இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதால், மனைவிக்கு கப்பல் போன்று வீடு கட்டி தருவதாக கடந்த சில வருடங்களுக்கு முன் சுபாஷ், மனைவியிடம் கூறியுள்ளார்.

இதற்காக கடலூர் வண்ணாரபாளையத்தில் 11 ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனை வாங்கி, அதில் 4000 சதுர அடியில் தனது கனவு வீட்டை கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் கட்ட தொடங்கினர். மனைவியிடம் உறுதியளித்ததை போலவே சுபாஷ் அனைவரும் வியக்கும் வண்ணம் கப்பல் போன்ற தனது வீட்டைக் கட்டி முடித்துள்ளார். இதில் தரை தளம் முதல்தளம் மற்றும் இரண்டாம் தளம் ஆகியவை உள்ளது. 6 அறைகள் உள்ளன. உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் ஆகியவையும் உள்ளது. கடந்த 2ம் தேதி வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்தது.

ஒரு கப்பலின் வெளிப்புற தோற்றமும், உட்புற தோற்றமும் எப்படி இருக்குமோ, அதே போல அச்சு அசலாக இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி அதன் மேல் கப்பல் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த வீடு மின்னொளியில் ஜொலிக்கிறது. சுபாஷ் குடும்பத்தில் அனைவரின் பெயர்களும் ஆங்கில எழுத்தான எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் இந்த வீட்டிற்கு எஸ் 4 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் வீடு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

The post அன்பு மனைவிக்கு கணவன் தந்த பரிசு கப்பலில் கூட்டி போக சொன்னா கப்பலே வீடா கொடுத்திட்டாரு… appeared first on Dinakaran.

Related Stories: