அரசு பொருட்காட்சிக்கு படையெடுக்கும் மக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம்: 26 நாட்களில் 1.57 லட்சம் பேர் வந்தனர்

கோவை: கோவையில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது அரசு பொருட்காட்சி நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு கோவை காந்திபுரம் அருகே உள்ள ஜெயில் மைதானத்தில் கடந்த மே மாதம் 13ம் தேதி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி துவங்கியது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பொருட்காட்சியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். இப்பொருட்காட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை உட்பட 27 அரசுத்துறை அரங்களும், 6 அரசுசார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அரசு பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் மாணவ, மாணவியர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.5 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பொருட்காட்சியை நேற்று வரை அதாவது 26 நாட்களில் அரசு பொருட்காட்சியினை பெரியவர்கள், சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம், ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பொருட்காட்சியினை காண வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எங்கள் குழந்தைகளை கோடை விடுமுறைக்கு எங்கும் அழைத்து செல்ல முடியவில்லை. வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். அப்போதுதான் காந்திபுரம் அருகே உள்ள ஜெயில் மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவங்கியது. இந்த பொருட்காட்சிக்கு எங்கள் குழந்தைகளை அழைத்து சென்றோம். அங்கிருந்த ராட்டினங்கள் மற்றும் விளையாட்டுகளில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினர். நாங்கள் அரசு பொருட்காட்சிக்கு சென்றது வார விடுமுறை நாட்கள் என்பதால், அப்போது, கோவை மாநகர போலீசார் சார்பாக காவல் துறையின் வளர்ப்பு நாய்களில் சாகச கண்காட்சி நடைபெற்றது. இதில், நாய்களின் சாகசம் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது. மேலும், அங்கு போடப்பட்டிருந்த ஸ்டால்களில் மிகக் குறைவான விலையில் அதிக பொருட்களை வாங்கி வந்தோம். எங்கள் குழந்தைகள் மீண்டும் பொருட்காட்சிக்கு அழைத்து செல்லுமாறு கேட்கின்றனர்.

அந்த அளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இப்பொருட்காட்சியில் உள்ளது. கோடி விடுறையில் சுற்றுலா தளங்களுக்கு செல்லாத குறையை இந்த அரசு பொருட்காட்சி தீர்த்துவிட்டது. இப்பொருட்காட்சி குறித்து சுரேஷ் கூறியதாவது: நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன். விடுமுறைக்கு என் மனைவி, குழந்தையை அழைத்து கொண்டு கோவை வந்தேன். காந்திபுரத்தில் கலர் கலராக மின் விளக்கு ராட்டினங்கள் அமைக்கப்பட்ட அரசு பொருட்காட்சியை கண்டு என் கண் கலங்கிவிட்டது. நான் சிறு வயதாக இருந்த போது என் பெற்றோர்கள் அரசு பொருட்காட்சிக்கு அழைத்து வந்தார்கள். இங்குள்ள ராட்டினங்கள் மற்றும் மற்ற விளையாட்டுகளில் விளையாடுவேன். வீட்டிற்கு செல்லும் பொழுது ஒரு பை நிறைய விலையாட்டு பொருட்களை வாங்கி செல்வேன். இப்போது என் 5 வயது குழந்தையை அழைத்து கொண்டு வந்துள்ளேன். சிறு வயது நியாபகங்கள் வந்து செல்கின்றன. இங்கு விற்கப்படும் டெல்லி அப்பளம், பஞ்சு மிட்டாய், பாவு பஜ்ஜி மற்றும் பல்வேறு விதமான ஐஸ்கிரீம்கள், ஆவின் பொருட்கள் மிகவும் சுவையானதாகவும், தரமானதாகவும் உள்ளது. மேலும், இங்கு டோரா டோரா, கப் அண்ட் சாசர் மற்றும் பல்வேறு ராட்டினங்கள் அனைத்திலும் ஒன்றுக்கு இரண்டு முறை விளையாடினோம். பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது.

The post அரசு பொருட்காட்சிக்கு படையெடுக்கும் மக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம்: 26 நாட்களில் 1.57 லட்சம் பேர் வந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: